மதுரை: மதுரையில் கூடல் நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தில் வழுக்கி விழுந்து சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் பாதள சாக்கடை திட்டப்பணிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக டெண்டர் எடுத்த நிறுவன ஊழியர்கள், சாலைகள், தெருக்களில் குழிகளை தோண்டிப்போட்டுள்ளனர். பணிகள் முடிய முடிய அதனை மூடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பணி முடியாதப்பட்சத்தில் அதனை மூடுவதில்லை. மேலும், சில இடங்களில் பணிகள் முடிந்தப்பிறகும் சரியாக மூடாமல் சென்று விடுகின்றனர்.
மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கூடல்நகர் சொக்கலிங்க நகர் 1ஆவது தெரு பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி நடைபெற்றது. அதற்காக தோண்டிய பள்ளத்தை தொழிலாளர்கள் சரிவர மூடாமல் சென்றுள்ளனர். நேற்று இரவு பெய்த கனமழையால் அந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்துள்ளது. அந்த வழியாக சென்றவர்கள், பள்ளம் எது, பாதை எது என்பது தெரியாமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் (45) என்ற நபர் அந்த வழியாக நடந்துவந்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் போராடி யாரும் இல்லாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்க வந்த ஆம்புலன்சும் அங்குள்ள சகதியில் சிக்கி செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது. அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க கோரியும் மதுரை – அலங்காநல்லூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி கூட்டம் நடந்ததால் உயர் அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை. போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அழைத்து சமாதானம் பேசினர். ரூ.2 லட்சம் பணத்தை கான்டிராக்டரிடம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். மறியல் போராட்டத்தால் 10 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இறந்த வேணுகோபாலுக்கு சமையல் தொழிலாளி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.