பெங்களூருவில் உள்ள அல்சூரில் 19 ஆண்டுகள் மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலை கடந்த 2009-ம் ஆண்டு பெரும் போராட்டத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். இதையொட்டி திருவள்ளுவர் சிலையின் கீழ்ப்பகுதியில் இருவரின் பெயர்களும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவாஜிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், பெங்களூரு மாநகராட்சியிடம் ரூ. 2 கோடி நிதியுதவி பெற்று திருவள்ளுவர் பூங்காவை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பகட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், திருவள்ளுவர் சிலையின் கீழ்ப்பகுதியில் எடியூரப்பா, கருணாநிதியின் பெயர் இடம்பெற்றுள்ள பலகையை மறைக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இதனால் கோபமடைந்த பாஜகவினர் எடியூரப்பாவின் பெயரை மறைப்பதற்கு எதிராக நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர் மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் எடியூரப்பாவின் பெயர் அடங்கிய கல்வெட்டு தெரியும் வகையில் திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர்.
இதைக் கண்டித்து காங்கிரஸார், தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ், சிவாஜிநகர் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் எம்எல்ஏ பிரசன்னகுமார் உள்ளிட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் சிலையை வைத்து காங்கிரஸாரும், பாஜகவினரும் அரசியலில் ஈடுபடுவதால் பெங்களூரு தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.