பெரும்போக நெற்செய்கைகச்கான முதலாவது முறைக்கு தேவையான யூரியா உரம், நாட்டில் உள்ள அனைத்து விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்திற்கு பல கட்டங்களின் கீழ் உரம், விநியோகிக்கப்படும்.
விவசாயத் திணைக்களத்தின் சிபாரிசுக்கு அமைவாக இம்முறை 70 வீத இரசாயன உரங்களும், 30 வீத இயற்கை உரங்களும் நெற்செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெற் செய்கையின்போது, விதைத்து அல்லது நாற்றுகளை நாட்டி 14 நாட்களுக்குள் முதல் கட்ட யூரியா உரமும், இரண்டாவது கட்ட யூரியா உரங்களை 04 வாரங்களுக்குப் பிறகும், நாற்றுகளை, விதைத்து அல்லது நாட்டி 42 முதல் 45 நாட்களுக்குள் மூன்றாவது கட்ட உரமும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மூன்று கட்டங்களுக்கும்; தேவையான உரத்தை ஒரே நேரத்தில் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஒரே நேரத்தில் வழங்குவதற்கான யூரியா உரம் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.