ப்ரின்ஸ் விமர்சனம்: இங்கிலாந்து பொண்ணு – தமிழ்நாட்டுப் பையன் காதல்; ஆனா பிரச்னை என்னன்னா..?!

கடலூர் இளைஞன் இங்கிலாந்து பெண்ணைக் காதலிக்க, அதை ஊரே எதிர்க்க, சோதனைகளைக் கடந்து அந்த இளைஞன் `ப்ரின்ஸ்’ ஆனாரா என்பதே படத்தின் ஒன்லைன்.

பள்ளி வாத்தியாராக வந்தாலும், வழக்கம்போல பொறுப்பில்லாத இளைஞன் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். தான் வேலை பார்க்கும் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வரும் மரியாவைப் பார்த்தவுடன் காதல். சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜுக்கு ஆங்கிலேயர்கள் என்றால் ஆகாது, அதேபோல, மரியாவின் அப்பாவுக்கு இந்தியர்கள் என்றாலே ஆகாது. இதற்கு நடுவில் இவர்களின் காதலைப் பிரிக்க பிரேம்ஜி தலைமையில் ஊரே திட்டம்போடுகிறது. சவால்களைக் கடந்து இந்த ஜோடி காதலில் ஜெயித்ததா என்பதே ‘ப்ரின்ஸ்’ படத்தின் கதை.

ப்ரின்ஸ் விமர்சனம்

வழக்கம்போல ஆயிரம் வாட்ஸ் எனர்ஜியுடன் சிவகார்த்திகேயன். சிங்கிள் டேக்கில் நீளமான டான்ஸ், நொடிக்கு நொடி டைமிங் காமெடி, சட்சட்டென மாறும் உடல்மொழி எனக் காட்சிக்குக் காட்சி திரையை அவர் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார். ‘ப்ரின்ஸ்’சின் ராஜா கண்டிப்பாக அன்பரசனாக வரும் சிவகார்த்திகேயன்தான். ஜெஸ்ஸிகா பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் உக்ரைனிய நடிகையான மரியா ரியாபோஷாப்கா. நடிப்பில் பாஸ் மார்க் பெற இன்னும் முயற்சி செய்யவேண்டும் என்றாலும், நடன அசைவுகளில் தேர்ச்சி பெறுகிறார்.

சிவகார்த்திகேயனின் தந்தையாக சத்யராஜ். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால், டயலாக் டெலிவரி, உடல்மொழி என அனைத்திலும் சற்றே மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது. ஓவர் ஆக்ட்டிங் என்பது மட்டுமே சிரிப்பை வரவைத்துவிடுமா? ஆழமான காட்சிகளைக்கூட காமெடி கதகளி பார்முலாவிலேயே அணுகியிருப்பது அவரின் பாத்திரத்துக்கு எந்தவித வலுவையும் சேர்க்கவில்லை. சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், பாரத், சதீஷ் ஆகியோர் தாங்களும் படத்திலிருப்பதாக அட்டென்டன்ஸ் மட்டுமே போடுகின்றனர். ஒரேயொரு காட்சிக்கு எட்டிப் பார்க்கும் சூரியின் போர்ஷன்கூட ‘சிரிக்க வைங்கப்பா’ எனக் கேட்கும்படியே இருக்கிறது. அதே சமயம், காவல் ஆய்வாளராக வரும் ஆனந்தராஜ் சிரிப்பு சரவெடியைக் கொளுத்திவிட்டுப் போகிறார்.

ப்ரின்ஸ் விமர்சனம்

தன் தெலுங்குப் படமான ‘ஜதி ரத்னலு’வை விடவே தீவிரத்தன்மை ஏதுமில்லாத ஃபீல்குட் கதை ஒன்றைத் தமிழுக்கு எழுதியிருக்கிறார் இயக்குநர் அனுதீப். ஆனால், பெரும்பாலான காமெடி காட்சிகள் படு செயற்கையாக, சிரிக்கவே வைக்க முயற்சி செய்யாத வசனங்களால் நிரப்பப்பட்டிருப்பது பெரும் சறுக்கல். போதாக்குறைக்கு இடையே எஸ்.எம்.எஸ் காலத்து ஜோக்குகளை எல்லாம் தூசு தட்டியிருக்கிறார்கள். என்னதான் சிவகார்த்திகேயன் மற்றும் பிற நடிகர்களின் கூட்டணி, அதை காமெடியாக மாற்ற முற்பட்டாலும் பெரும்பாலான இடங்கள் அயர்ச்சியை மட்டுமே உண்டாக்குகின்றன.

வில்லனாக வரும் பிரேம்ஜி அசட்டுத்தனமாக வசனங்கள் மட்டுமே பேசுகிறாரே தவிர, எங்குமே பயமுறுத்தவுமில்லை, சிரிக்க வைக்கவுமில்லை.”என் ரத்தம் லைட்டு பிங்க்”, “இந்த மாதிரி நிறையத் தடவை நடந்திருக்கு. ஆனா, இதுதான் ஃபர்ஸ்ட் டைம்”, “இவர்தான் எங்கப்பா… வயசுல என்னைவிட மூத்தவரு”, “எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்கு பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?” என வசனங்கள் அவ்வப்போது சிரிப்பு மத்தாப்பைக் கிள்ளிப்போட்டாலும், சுமாராக எழுதப்பட்ட காட்சியமைப்புகள் வெடிக்காத பட்டாசாக அவற்றை நமத்துப் போகச் செய்திருக்கின்றன.

ப்ரின்ஸ் விமர்சனம்

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கிருத்திகா சேகரின் ஆடை வடிவமைப்பு இளமைத்துள்ளல். தமனின் இசையில் ‘ஜெஸ்ஸிகா’ பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. ஸ்டாக்கிங் போன்றவற்றை சிவகார்த்திகேயன் கடந்து வந்துவிட்டாலும், இன்னமும் ‘பாய் பெஸ்ட்டி’ ரக காமெடிகள், காதல் தோல்விக்குப் பிறகு வரும் ‘சூப் சாங்’ போன்றவை அவசியமா? பார்த்துப் பண்ணுங்க சி.கா.

ப்ரின்ஸ் விமர்சனம்

ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே தங்களின் புதுமையான கதைக்கு ஏற்றதொரு வித்தியாசமான உலகத்தைக் கட்டமைத்து அதில் தன் கதைக்குத் தோதான கதாபாத்திரங்களை உலவவிட்டு ஆச்சர்யப்பட வைப்பார்கள். அனுதீப் அந்த முயற்சியில் முழுமையடையாமல் ஒரு சில விஷயங்களில் மட்டுமே பாஸ் மார்க் பெறுகிறார். அதைத் தாண்டி இந்த `ப்ரின்ஸ்’சை கொண்டாடக் காரணங்கள் எதுவுமில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.