மதுரை : மாநகராட்சியின் கூடல்நகர் பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடைப் பணியின் போது, பள்ளத்தை சரிவர மூடாமல் அப்படியே விட்டுசென்றதால், நேற்று பெய்த கனமழையால் பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்துள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த வேணுகோபால் (வயது 45) என்ற நபர் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அந்த வழியாக யாரும் வரவில்லை. சாக்கடை பள்ளத்தில் சிக்கிய வேணுகோபால் மூச்சு திணறி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இன்று காலை உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்க வந்த மாநகராட்சி ஆம்புலன்சும் சாக்கடை சேர்-சகதியில் சிக்கி செல்ல முடியாமல் திணறியது.
இதனால் கொதித்தெழுந்த அந்த பகுதி வாசிகள் சாலையை சீரமைக்க கோரியும், உயிரிழந்த வேணுகோபாலின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் மதுரை-அலங்காநல்லூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அழைத்து சமாதானம் பேசிய போலீசார், வேணுகோபாலின் குடும்பத்திற்கு ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.2 லட்சம் பணத்தை பெற்று தருவதாக உறுதியளித்தனர்.
போலீசாரின் உறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.