மாணவர்களை வேலை வாங்கிய விவகாரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்: விழுப்புரம் சிஇஓ அதிரடி

விழுப்புரம்: செஞ்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக டிராக்டரில் மேஜைகளை ஏற்றிச் சென்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம்  ஆலம்பூண்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறனறிவு தேர்வு நடைப்பெற்றது. அப்போது  தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள் இல்லாத காரணத்தால் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மேஜை, நாற்காலிகள் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திறனறிவு தேர்வுகள் முடிந்த நிலையில் வாங்கப்பட்ட மேஜை, நாற்காலிகளை தனியார் பள்ளியிடம் மீண்டும் வழங்குவதற்காக ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஒரு டிராக்டரில் ஏற்றி அதனை கீழே விழுந்துவிடாமல் பிடித்தவாறு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.  

ஆலம்பூண்டியில் இருந்து சத்தியமங்கலம் வரை சுமார் 5 கிமீ தூரத்திற்கு டிராக்டரில் மேஜை, நாற்காலிகளை பிடித்தபடி நின்று கொண்டே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைத்த ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா உத்தரவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.