புதுடில்லி :ரயில் பயணத்துக்கான டிக்கெட் கட்டண தொகையை மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் புதிய வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை மாதாந்திர தவணை முறையில் வாங்கும் நடைமுறை பல ஆண்டுகளாகவே பழக்கத்தில் உள்ளது.
‘ஆன்லைன்’ வர்த்தகம் சூடுபிடிக்க துவங்கியதும், மாதாந்திர தவணை முறை அதிக அளவில் புழக்கத்துக்கு வந்தன.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கடன் அட்டை வினியோகிக்கும் வங்கிகளும் இந்த மாதாந்திர தவணை முறை சேவையை அளிக்கின்றன.
இந்த வரிசையில், ரயில் பயணங்களுக்கான செலவுகளையும் இனி மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும் ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படும், ‘தத்கல்’ உட்பட அனைத்து வகுப்பு பயண சீட்டுகளுக்குமான கட்டணத்தை, 6 – 8 மாதகால தவணையில் இனி செலுத்த முடியும். ‘கேஷ் இ’ என்ற நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி., உடன் இணைந்து இந்த வசதியை அளிக்கிறது.
டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், பணம் செலுத்தும் பக்கத்தில் ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்’ தேர்வுகளுடன் தவணை முறை சேவை என்ற தேர்வும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதை, ‘க்ளிக்’ செய்தால் எவ்வித ஆவணங்களும் இன்றி தவணை முறை சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement