மூடப்பட்ட சாலைகள், மாற்றுப் பாதைகள் குறித்து அறிய வாகன ஓட்டிகளுக்கு புதிய செயலி அறிமுகம்: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: மூடப்பட்டுள்ள சாலைகள் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்து உடனுக்குடன் அறிய, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்காக சென்னை காவல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். அண்மைக் காலமாக சென்னையில் மெட்ரோ ரயில் மற்றும் மழைநீர் வடிகால்வாய் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் சாலையை மறித்து நடைபெறுகின்றன. இதுபோன்ற தற்காலிக சூழ்நிலையைச் சமாளிக்க பல நேரங்களில் குறிப்பிட்ட சாலையில் ஒரு வழி அல்லது இரு வழிகளையும் போக்குவரத்து போலீஸார் மூடுகின்றனர்.

சாலைகள் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்களைத் திருப்பிவிடும் போதெல்லாம் அதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அவ்வாறு செய்யும்போது, கூகுள் வரைபடத்தில் மூடப்பட்ட சாலை அல்லது திசை திருப்பல் பற்றி உடனடியாகத் தெரியவராது. திடீரென நடைபெறும் போராட்டம், வாகனம் பழுது அல்லது விபத்து போன்ற நிகழ்வுகள் குறித்த தகவலை உடனடியாக அறிந்து மாற்றுப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்லவாய்ப்பு இல்லை. இதுபோன்ற சிரமங்களைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை போக்குவரத்து போலீஸார் ‘roadEase’ (சாலை எளிமை) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

அதன்படி சென்னை போக்குவரத்து போலீஸார் ஒரு குறிப்பிட்ட சாலையை மூடுவது மற்றும் அதன் கால அளவு குறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்கள். அந்த நிறுவனத்தினர் அதை செயலி மூலம் 15 நிமிடங்களுக்குள் கூகுள் மேப்பில் புள்ளியிடப்பட்ட சிவப்பு கோட்டுடன் மூடப்பட்ட சாலைகளை காண்பிக்கும் வகையில் பதிவேற்றுவர். அதே நேரத்தில், மூடப்பட்ட பிறகு வாகனங்கள் செல்லக்கூடிய சிறந்த வழியையும் வரைபடம் காண்பிக்கும். இந்த செயலியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கடந்த 4 நாட்களாகச் சோதனை செய்து, வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

‘roadEase’ செயலியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தொடங்கி வைத்து பேசும்போது, “இந்த புதிய ஏற்பாடு நீண்டகால அடிப்படையில், சென்னையின் சாலை பயனாளர்களுக்கு எந்த ஒரு சாலை மூடல் மற்றும் மாற்றுப்பாதையை நிகழ் நேர அடிப்படையில் தெரிவிக்கவும், பயண நேரம் மற்றும் கிடைக்கக்கூடிய மாற்றுப் பாதைகளை மதிப்பிடவும் பயன்படும்” என்றார். இந்நிகழ்ச்சியில், சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி. சரத்கர், அப்பிரிவின் துணை ஆணையர்கள் ஹர்ஷ் சிங், சமய்சிங் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.