யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையில்,  தீபாவளி பண்டிகை மற்றும் புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதால், இந்திய ஒற்றுமை பயணத்தில் இருந்து ராகுல்காந்தி 3 நாள் விடுமுறை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல், பாஜகவின் மக்கள் விரோத போக்கு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த  செப்டம்பர் 7ஆம் தேதி குமரியில்  தொடங்கிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தை எட்டியிருக்கிறது.  இந்த யாத்திரையின்போது, வழிநெடுகிலும் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தற்போது 44வது நாளாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்றைய யாத்திரையின்போது, அவருடன் நடைபயணம் வந்த ஒரு குழந்தையை தோளில் சுமந்து நடைபயணம் சென்றார். இது அந்த பகுதியில் இருந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தவீடியோ வைரலாகி வருகிறது. நாளைய யாத்திரையில் ராகுலுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்வார் என்ற உறுதிப்படாத தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 24ந்தேதி முதல் 26ந்தேதிவரை 3 நாட்கள் யாத்திரையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 24ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 26ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் தலைவராக பொறுப்பேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், 23ந்தேதி நடைபயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பின்னர், 26ந்தேதி டெல்லி நிகழ்ச்சி முடிந்ததும், பயணத்தை விட்ட இடத்திற்கு திரும்பி வந்து மீண்டும் 27ந்தேதி முதல் வழங்கம்போல் யாத்திரையை தொடர உள்ளார்.  ராகுல்காந்தி டெல்லி செல்ல இருப்பது இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படாத நிலையில்,  ‘பாரத் ஜோடோ யாத்ரா’ துவங்கிய பின், பாதயாத்திரைக்கு நடுவே, டில்லி சென்றால்,  இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில்,  அடுத்த சில வாரங்களில் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதைத்தொர்ந்து குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில், ராகுல் இடையிடையே ஒற்றுமை யாத்திரையில் இருந்து விலகி செல்வாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.