நேற்று(20) முதல் அமுலுக்கு வரும் வகையில், கடலோர அலுவலக ரயில்களின் காலை நேர பயண நேரங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் பாணந்துறைக்கும் இடையிலான புகையிரத பாதைகளில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை காரணமாக ரயில் இயங்கும் வேகத்தை குறைக்க வேண்டியுள்ளது. தற்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் புகையிரத நிலையங்களில் நிறுத்துவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த காரணிகளை கருத்திற்கொண்டு புகையிரதங்களின் பயண நேரத்தல் மாற்றத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (20) முதல் கடலோரப் பாதையினூடாக காலை நேரத்தில் பயணிக்கும் அலுவலக புகையிரதங்களின் பயண நேரம் திருத்தப்பட்டுள்ளது. 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பயணித்த ரயில் நேரத்தை விட 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்னர், புதிய திருத்தப்பட்ட ரயில் அட்டவணையின்படி ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தன் பின்னர் மாலை நேர அலுவலக ரயில்களின் பயண நேரமும் மாற்றப்படவுள்ளது