புதுடெல்லி: வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை பேசுபவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், வெறுப்புப் பேச்சுகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு கடந்த 9-ம் தேதி மீண்டும் புதுடெல்லியில் நிகழ்ந்துள்ளது. அதன் காரணமாகவே, தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்தார். முஸ்லிம்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி ஒருவர் பேசியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜனநாயகமும் மத நடுநிலையும் கொண்ட நாடான இந்தியாவில் இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற பேச்சுக்கள் இந்துக்களுக்கு எதிராகவும் பேசப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில் வெறுப்புச் சூழல் நிலவி வருவதால் புகார் மிகவும் தீவிரமானது. இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் காவல் துறை டிஜிபிக்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாட்டின் மதச்சார்பின்மை தன்மையை பாதுகாக்கும் நோக்கில், தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் காவல் துறை முன்வர வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.