உலக அளவில் நடக்கும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக நிதியுதவி போன்றவற்றை கண்காணிக்கும் அமைப்பு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு. சுருக்கமாக எஃப்.ஏ.டி.எஃப் (FATF) என்று சொல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது.
இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் அதிகம் நடைபெறுகிறது என்பதை கண்காணித்து, அந்த நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிதி அமைப்புகள் நிதியுதவி வழங்குவதை தடுக்கும். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்தும்வரை சம்பந்தப்பட்ட நாடுகளை ‘கிரே பட்டியல்’ என்றழைக்கப்படும் மோசமான பட்டியலில் வைத்திருக்கும்.
கடந்த 2018ல் பாகிஸ்தான் இந்த அமைப்பின் கிரே பட்டியலில் இடம்பெற்றது. இந்தியாவால் தேடப்படும் ஜெயஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆகியோருக்கு நிதியுதவி தருவதை நிறுத்த வேண்டும், அதுவரை பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருக்கும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், பயங்கவராததுக்கு எதிராக 30க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எஃப்.ஏ.டி.எஃப் உத்தரவிட்டது.
ஆனாலும், இதில் பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காததால் கடந்த நான்கு வருடங்களாக கிரே பட்டியலில் இடம்பெற்று சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து உதவி பெற முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது பாகிஸ்தான். இதனால், பணவீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள் அந்நாட்டில் அதிகமாகின.
இந்நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாரிசில் நடந்த FATF கூட்டத்தில் பாகிஸ்தானை பட்டியலில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. FATF அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. பாகிஸ்தானை பட்டியலில் இருந்து நீக்கும் முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை பதிவு செய்தது. எனினும், பாகிஸ்தான் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதே நேரத்தில் மியான்மர் மிகவும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டது.