புதுடெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு எப்ஏடிஎப் எனப்படும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளித்தல் மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடும் நாடுகளை ‘சாம்பல் பட்டியல்’ எனப்படும் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில் சேர்த்து விடும். இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்த நாடு உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிதி உதவி பெற முடியாது.
கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கு ஆளான நிலையில், வேறு வழியின்றி தீவிரவாதிகளுக்கு எதிராக அது நடவடிக்கைகளை எடுத்தது. இதன் மூலம் எப்டிஏஎப்.பின் சாம்பல் பட்டியலில் இருந்து 4 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் நேற்று நீக்கப்பட்டது. ‘எப்ஏடிஎப் விதித்த 34 கட்டளைகளை நிர்ணயித்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே பாகிஸ்தான் நிறைவேற்றி உள்ளதால் சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது’ என எப்ஏடிஎப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் முதல் முறையாக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.