Bharat Jodo Yatra: முக்கியமான நிகழ்வு… 3 நாட்கள் லீவு போடும் ராகுல்… டெல்லிக்கு புறப்பட ஏற்பாடு!

இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. 2024 மக்களவை தேர்தலுக்குள்
காங்கிரஸ்
எழுச்சி கண்டே ஆக வேண்டும். இல்லையெனில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். மூன்றாவது அணி, நான்காவது அணி என பிராந்திய கட்சிகள் திட்டம் தீட்ட தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி அணிகள் பிளவுபடுவதால் வாக்குகளும் பிரிந்து பாஜகவிற்கு சாதகமாக முடிய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஒன்றுபட்ட நிலை தேவைப்படுகிறது. அதற்கு காங்கிரஸ் கட்சி சில விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முதலில் தங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்.

அப்போது தான் பிராந்திய கட்சிகள் பின்னால் வரும். உட்கட்சி பூசலும், சரியான தலைமை இல்லாத விஷயமும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இவை இரண்டிற்கும் தீர்வு காணும் நேரம் வந்துவிட்டது. கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார்.

குமரி முதல் இமயம் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை ஆனது தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தை எட்டியிருக்கிறது. வழிநெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் ஆந்திர மாநில எல்லையில் உள்ள மந்திராலயம் பகுதியில் உள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். இதற்கிடையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அதில் சசிதரூரை தோற்கடித்து மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

இவர் வரும் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகை விடுமுறை வேறு வருகிறது. எனவே இந்திய ஒற்றுமை பயணத்திற்கு சற்று ஓய்வு அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் ராகுல் காந்தி டெல்லியில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. 26ஆம் தேதி பதவியேற்பு விழாவை முடித்துக் கொண்டு, மீண்டும் ஆந்திர மாநிலத்திற்கு திரும்பி விட்ட இடத்தில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கவுள்ளார்.

இவரது நடைபயணம் அடுத்து வரும் தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.