டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்ளும் போட்டியே அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியாக இருக்கிறது. அத்தனை பேரின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கும் அந்த போட்டிக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் மோதல்களில் இதுவரை நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
1996 உலகப் கோப்பை:
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த1996 உலகக் கோப்பையின் காலிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. நவ்ஜோத் சித்துவின் அற்புதமான 93 ரன்கள் மற்றும் அஜய் ஜடேஜாவின் 45 ரன்கள் உதவியுடன், இந்தியா மொத்தம் 287 ரன்களை எடுத்தது. 288 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி பவர் பிளேயில் 84 ரன்களை எடுத்து விறுவிறுப்பாகத் தொடங்கியது. 15வது ஓவரில் அமீர் சோஹைல் ஒரு பவுண்டரி அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அப்போது அமீர் சோஹைல் பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத்திடம் பவுண்டரி லைனை சுட்டிக்காட்டி இனிமேலும் இப்படித்தான் பவுண்டரி அடிப்பேன் என்பது போல கூறியிருந்தார்.

அமீர் சோஹைலின் இந்த செய்கைக்கு அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாத், பேக் ஆஃப் லெங்த் பந்து வீச்சில் சோஹைலை கிளீன் போல்ட் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார். வெங்கடேஷ் பிரசாத் செய்த தரமான சம்பவம் இது. இந்தியா பாகிஸ்தான் மோதலை பற்றிப் பேசும்போது இந்த சம்பவத்தைத் தவிர்க்கவே முடியாது.
2007 டி20 உலகக்கோப்பை
2007 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ராபின் உத்தப்பா அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்திருந்தார். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 87 /5 என்ற நிலையில் இருந்தது. மிஸ்பா-உல்-ஹக் தனது சிறப்பான ஆட்டத்தினால் 53 ரன்கள் எடுத்தார். இறுதியாக பாகிஸ்தானும் 141 ரன்களை எட்டி போட்டியை டை ஆக்கியது. வெற்றியை தீர்மானிக்கும் விதமாக கால்பந்தில் பெனால்டி ஷூட் அவுட் போன்று, பௌல் அவுட் (bowl out) முறையில் இரு அணிகளும் இறங்கினர். இந்திய அணியில் வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா ஆகியோர் பந்து வீச பாகிஸ்தானில் யாசிர் அராபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் பந்து வீசியிருந்தனர்.
பயங்கரமான பந்து வீச்சாளர்களை இறக்கிய பாகிஸ்தானால் ஒரு முறை கூட போல்டை தகர்க்க முடியவில்லை. இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய மூவரும் ஸ்டம்புகளை தெறிக்க விட இந்திய அணி 3-0 என போட்டியை வென்றிருந்தது.
2007 டி20 உலகக்கோப்பை
2007 டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கௌதம் கம்பீரின் 72 ரன்கள் மூலம் இந்திய அணி 157 என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. 12 ஓவர் முடிவில் 27-6 என்ற நிலையிலிருந்து பாகிஸ்தானை மிஸ்பா கடைசி ஓவர் வரை அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் கடைசி ஓவர் மிகவும் சுவாரசியமாகவும் திரில்லாகவும் இருந்தது. கடைசியில் பாகிஸ்தான் ஆறு பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும்.

கடைசி ஓவரை தோனி சீனியர் பவுலர்கள் யாரிடமாவது கொடுப்பார் என எதிர்பார்க்க ஜோஹிந்தர் சர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் தோனி. மிஸ்பா scoop சாட் அடிக்க ஸ்ரீசாந்த் அதை அருமையாக கேட்ச் பிடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா.
2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி:
2011 உலகக்கோப்பை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. தோனி தலைமையில் இரண்டாவது முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்றது. உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தானுக்கு 260 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். எப்போதெல்லாம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் அணியை சரிவிலிருந்து காப்பாற்றி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் மிஸ்பா. இந்தப் போட்டியிலும் அப்படி தான் நடந்தது. ஒற்றை ஆளாக நின்று இந்திய அணிக்கு சவால் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் மிஸ்பா அவுட் ஆகி இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 6 .77 கோடி பார்வையாளர்கள் டிவியில் மட்டும் இந்த போட்டியை கண்டு களித்தனர்.
Off field சுவாரஸ்யமான சம்பவங்கள்:
இந்தியா பாகிஸ்தான் இடையே ஆஃப் பீல்டில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பதுண்டு. தற்போது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அக்டோபர் 23ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் முகமது ஷமி, பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு பௌலிங் டிப்ஸ் கொடுத்த வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகின.

அதேபோல, விராட் கோலி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மூவரும் அருகருகே வலைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருந்தது.