புதுடெல்லி: சிட்ராங் புயல் அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று நாளை அக்டோபர் 23-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். பின்னர் இது படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவாகி (சிட்ராங் புயல்) வரும் 25ஆம் தேதி வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும்.
இதனால் மேற்கு வங்க கரையோரங்களில் பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை செயலர் ராஜிவ் கவுபா, சிட்ராங் புயலால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கணித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்தப் புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநில அரசு அதன் 7 கடலோர மாவட்டங்களை உஷார்படுத்தியுள்ளது. கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், குர்தா, கேந்திரபாடா, பத்ரக், பாலசோர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையங்கள் முன்னெச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.