இளம்பெண் அங்கிதா கொலை வழக்கு; உத்தரகாண்ட் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணி செய்து வந்தவர் அங்கிதா பண்டாரி (19). இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு சில்லா கால்வாயில் இருந்து அங்கிதா பண்டாரி சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணை நடத்தியதில் இளம்பெண் கொல்லப்பட்டு கால்வாயில் வீசியது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர்தான் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. ரிசார்ட்டுக்கு வரும் விஐபி விருந்தினருக்கு பாலியல் ஆசைகளை நிறைவேற்றுமாறு இளம்பெண்ணை ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அங்கிதா மறுக்கவே அவரை மூன்று பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியது அம்பலமானது. மேலும், கைதானவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி வினோத் ஆர்யாவின் மகன் என்பதால் இந்த வழக்கு அரசியல் ரீதியாக வெடித்தது. சம்பந்தப்பட்ட ரிசார்ட் புல்டோசர் ஏற்றி இடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அசுதோஷ் நேகி என்பவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையிலான ஒற்றை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.