ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் அடுத்து கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஒரு விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் இரண்டு பேரும் இரட்டையர்கள் ஆவர்.
இவர்கள் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் ராகுல் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 400 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 5-வது இடமும், பின் தங்கிய வகுப்பு பிரிவில் 2-ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், கோகுலும் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 372 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையடுத்து ராகுல் சென்னை மெடிக்கல் கல்லுாரியிலும், கோகுல் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியிலும் சேர்ந்த்துள்ளனர். இரட்டையர்களாக இவர்கள் இரண்டு பேரும் படித்த பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ உள்பட ஆசிரியர்கள் ராகுல் மற்றும் கோகுல் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.