மதுரை: உள்ளாட்சி அமைப்புகளின் ஆன்லைன் வரி வசூலை கண்காணிக்கக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், பூதிப்புரம் அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்த பெத்துரான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஊராட்சிகளின் பிரதான வருவாயாக வரி வசூல் உள்ளது. சில ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் முறையில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணம் முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வரி வசூலிப்பதை முறையாக கண்காணிக்கவும், குழு அமைத்து தணிக்கை செய்யவும், வசூலித்த பணத்தை உள்ளாட்சி அமைப்புகளின் கணக்கில் செலுத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், மனுவிற்கு நகராட்சி நிர்வாக செயலர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
