புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பற்றிய அறிவிப்பை டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதில் பதிவு செய்வதற்கான இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார். இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள், வாரணாசியில் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடத்தப்படும். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இருந்த கலாச்சார தொடர்புகளை வெளிக் கொண்டுவரும் வகையிலான பரிமாற்ற நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விவாதங்கள் இதில் நடத்தப்படும். இதில் வாரணாசி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கலாச்சார நிபுணர்கள், அறிஞர்கள் பங்கேற்பர்.
காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்த கலாச்சார உறவுகளை மீண்டும் கண்டறிய சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான உயர்நிலைக்குழுவான பாரதிய பாஷா கமிட்டி முன்வந்துள்ளது.
இந்தக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. காசி, தமிழகம் மக்கள் இடையே பகிரப்பட்ட பாரம்பரியத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்துவதுதான் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் நோக்கம். மக்களையும், மொழிகளையும் இணைக்க இது உதவும். இந்த நிகழ்ச்சியை சென்னை ஐஐடி மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும். இலக்கியம், சித்தாந்தம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதா, கைத்தறி, கைவினைத் தொழில்கள், வர்த்தக பரிமாற்றங்கள், நவீன கண்டுபிடிப்புகள், கல்வி தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இந்திய அறிவு, கல்வி மற்றும் பயிற்சி நடைமுறைகள், கலை, கலாச்சாரம், மொழி, இலக்கியம் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதால் மாணவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்களுக்கு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். சென்னை, ராமேஸ்வரம், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 210 பேர் கொண்ட ஒரு குழுவை வாரணாசிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இது போல் ஒரு மாத காலத்தில் 12 குழுக்களில் சுமார் 2,500 பேர் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், கலாச்சார நிபுணர்கள், தொழில்முனைவோர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைத்தள எழுத்தாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி பற்றிய ஆழ்ந்த அனுபவத்தை பெறுவர். கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் மூலம் வாரணாசி மக்களும் தமிழகத்தின் வளமான கலாச்சாரத்தை அறிய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.