`ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம்' -முகநூலில் வந்த விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை இழந்த பெண்

இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சோசியல் மீடியா மூலம் நடக்கும் மோசடிகள் தான் அதிக அளவில் நடக்கிறது. சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி பணம் அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். மும்பையில் ஃபேஸ்புக் விளம்பரத்தை பார்த்த ஒரு பெண் ரூ.8 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பை பாந்த்ரா பகுதியை சேர்ந்த நித்யா(54) என்ற பெண் அடிக்கடி ஃபேஸ்புக் பக்கங்களை பார்ப்பது வழக்கம். அப்படி பார்த்த போது ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரம் அவரது கண்ணில் பட்டது. ‘மகாராஜா தாலி’ என்ற ராட்சத சாப்பாடு வெறும் ரூ.200 மட்டும் என்றும், 200 செலுத்தினால் இரண்டு சாப்பாடு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உடனே அந்த சாப்பாட்டை ஆர்டர் செய்வதற்காக அப்பெண் விளம்பரத்தை கிளிக் செய்தார். அதில் சாப்பாட்டை ஆர்டர் செய்யும் முன்பு ரூ.200-ஐ செலுத்த வங்கி கணக்கு விபரங்களை பூர்த்தி செய்யும்படி ஒரு விண்ணப்பம் வந்தது. அந்த விண்ணப்பத்தை நிரப்பியவுடன் மற்றொரு லிங்க் வந்தது. அதில் ஏடிஎம் கார்டு விபரங்கள் கேட்கப்பட்டு இருந்தது. அதையும் அப்பெண் பூர்த்தி செய்தார். உடனே மற்றொரு லிங்க் அனுப்பி ஒரு மொபைல் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த ஆப் மூலம் மொபைல் போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியும். மும்பை பெண் இந்த ஆப்பை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தவுடன் அப்பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8.46 லட்சத்தை மர்ம நபர்கள் 27 பரிவர்த்தனைகள் மூலம் எடுத்துவிட்டனர். முதல் நாள் மாலை 5 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 9 மணி வரை இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகுதான் அப்பெண்ணிற்கு இது குறித்து போனில் தகவல் வந்தது. உடனே அடுத்த நாள் இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நித்யா வங்கியில் வைப்பு தொகை வைத்திருந்தார். அந்த வைப்பு தொகையை எடுத்து சில நாட்களுக்கு முன்புதான் வங்கி கணக்கில் போட்டிருந்தார்.

நடிகையிடம் ரூ.1.6 லட்சம் மோசடி

மற்றொரு சம்பவத்தில் பாலிவுட் நடிகை ஆஸ்தா ஸிடானா ரூ.1.6 லட்சத்தை இழந்துள்ளார். உங்களது கேஒசி விபரங்களை அப்டேட் செய்யவில்லையெனில் இ-வேலட் கணக்கு முடக்கப்படும் என்று கூறி நடிகைக்கு ஒரு மெசேஜ் வந்தது. உடனே அந்த லிங்கில் தனது வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்தார். ஆனால் அதில் கேட்ட ஒன் டைம் பாஸ்வேர்டு விபரங்களை தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.6 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பெண் கூறுகையில், “எனக்கு இ-வேலட் கேஒசி விபரங்களை தாக்கல் செய்யும்படி மெசேஜ் வந்தது.

ஆஸ்தா

நான் பான் கார்டு விபரங்களை டைப் செய்த பிறகு மெசேஜ் வந்த நம்பருக்கு போன் செய்தேன். அதில் பேசிய நபர் எனது இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டை செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் பாஸ்வேர்டை டைப் செய்யாமல் போனை கட் செய்துவிட்டேன். அப்படி இருந்தும் எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.6 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது” என்று தெரிவித்தார். இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.