பெங்களூரு: கர்நாடகாவில் செயல்பட்டு வந்த சீன ‘லோன் ஆப்’ நிறுவனங்களிடம் இருந்து ரூ.78 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் ‘செல்போன் ஆப்ஸ்’ மூலம் கடன் பெற்ற மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது பெங்களூரு நகர சைபர் கிரைம் போலீசார் 18 எப்ஐஆர்களை பதிவு ெசய்துள்ளனர்.
விசாரணையில் கடன் வழங்கிய நிறுவனங்கள் பெரும்பாலும் சீன நாட்டினரின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அமலாக்கத்துறை கண்காணித்து வந்தது. தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மேற்கண்ட நிறுவனங்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை அந்த நிறுவனங்களின் டம்மி டைரக்டர்களாக நியமித்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பெங்களூருவில் சீனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனங்களின் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களின் நிர்வாகிகளின் ஐடிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.78 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ரூ.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்று அவை தெரிவித்தன.