சென்னை: இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பணியின்போது உயிரிழந்த 264 போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு நேற்று சென்னையில் 144 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
1959 அக். 21-ம் தேதி, லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் வீரவணக்க நாள் அக்.21-ம் தேதி அனுசரிக் கப்படுகிறது.
கடந்த ஆண்டில், தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் எஸ்.பூமிநாதன், எம்.சந்திரசேகரன் மற்றும்முதல்நிலைக் காவலர் பி.தேவராஜன் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர், காவல் துறையினர்264 பேர் வீர மரணமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை மெரினா சாலையில் உள்ள டிஜிபிஅலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அங்குள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வீரமரணமடைந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தாஜோதி, மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி-க்கள் முகமது ஷகில் அக்தர் (சிபிசிஐடி), பி.கே.ரவி (தீயணைப்புத் துறை), ஏ.கே.விஸ்வநாதன் (தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம்), ஆபாஷ் குமார் (குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு) மற்றும் காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ‘‘களப் பணியாற்றும்போது வீர மரணமடைந்த காவல் துறையினர் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம்’’ என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக, கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் வீர மரணமடைந்த 264 காவல் துறையினர், துணைராணுவ படையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில், 144 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.