புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது. புதுச்சேரியில் அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சிக்குச் சவால் விடுக்கும் வகையில் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது. அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை, மாநில அரசின் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் பேசி அதை காணொளியாகத் தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிடுவது, மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்துவதாகக் கூறி வீதியில் இறங்கி உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை பணி செய்ய வைத்தது என அதிரடி நடவடிக்கை மூலம் மக்களைக் கவர கிரண் பேடி ஆர்வம் காட்டினார்.

ஆனால், இதற்கு நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராட்டத்தையும் நடத்தினார். பின்னர், இது சட்டப்போராட்டமாக உருவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் அளவுக்குத் தீவிரமானது. இந்தச்சூழலில், ஆளுநருக்கு எதிராக தர்ணா, கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை காங்கிரஸார் நடத்தினர். 2021 பிப்ரவரி 10-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வராக இருந்த நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து மக்கள் கையெழுத்து அடங்கிய மனுக்கள், நான்கு பக்க புகார் மனுவைத் தந்தனர். அப்போது, கிரண்பேடி துக்ளக் தர்பார் நடத்துவதால் அவரை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிப்ரவரி 16-ம் தேதி கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய துணை நிலை ஆளுநராகத் தெலங்கானாஆளுநர் தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கபபட்டது. வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அல்லது குடியரசுத் தலைவரின் மறு உத்தரவுவரை துணைநிலை ஆளுநரின் பதவிக்காலம் இருக்கும். ஆனால், ஐந்து ஆண்டு பதவிக் காலத்துக்கு முன்பாகவே கிரண் பேடி நீக்கப்பட்டார். கிரண்பேடி நீக்கப்பட்டதைப் புதுச்சேரி காங்கிரஸார் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீபாவளி பண்டிகை போல் கொண்டாடினர். இன்னொரு பக்கம் தமிழிசை நியமிக்கப்பட்டது அவர்களுக்கு மேலும் ஒரு இடியாக அமைந்தது. இதற்கிடையில், புதுச்சேரியில் ஏற்பட்ட அரசியல் பிரச்னைகளால் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் தலைமையில் ஆட்சி அமைந்தது.
கிரண்பேடியை போல தமிழிசையும் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சி பறிபோன பின்னரும் நாராயணசாமி, ஆளுநர் தமிழிசையின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த நாராயணசாமி, “கவர்னர் தமிழிசை இரட்டை ஆட்சி நடத்துகிறார். தெலங்கானாவில் அவரால் மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகேட்க முடியுமா? தமிழிசை முதல்வரின் முதுகில் குத்துகிறார்” என்று கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், “என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன்.
ஆனால், மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள், குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து மக்களை சந்திக்க மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. என்னை யாரும் விரட்டவில்லை” என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதேபோல், சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழிசை, “புதுச்சேரியில் நான் அன்றாட நிகழ்வுகளில் தலையிடக்கூடாது என்று நாராயணசாமி கூறுகிறார். அண்ணன் ரங்கசாமியும், நானும் இணக்கமாகச் செயலாற்றும் போது மக்களுக்கு கிடைக்க வேண்டியது உடனடியாக கிடைக்கிறது. எனது பணி மக்களுக்கானது. எனது பங்கு அரசியலில் எப்போதும் இருக்கும்” என்றார். முதல்வர் ரங்கசாமியோ, “புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநரின் தலையீடு எதுவும் இல்லை” என்று விளக்கம் அளித்தார். ஆனால், நாராயணசாமிக்கும், தமிழிசைக்கும் இடையே தொடர் மோதல் நீடித்தவாறு இருக்கிறது.

இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “புதுச்சேரியில் கிரண்பேடி ஏற்கனவே ஒரு ஆளுநருக்கான கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதிலிருந்து தமிழிசையால் பின்வாங்க முடியாது. ஆளுநருக்கும், மக்களுக்கும் என்ன சம்பந்தம்? அது ஒரு நியமன பதவி. மக்களுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் கூற வேண்டும். மக்கள் பிரச்னைகளில் அரசு இயந்திரம் சரிவர இயங்கவில்லை என்றால் தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை ஆளுநரிடம் நேரடியாகக் கூறும்போது அவர் அரசிடம் தான் அதை கொண்டுசெல்ல முடியும். ஆளுநர்களின் வரம்புகள் என்னவென்று அவர்களுக்கு இன்னும் முழுமையாக விளங்கவில்லை” என்றார்.