தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின் படி ,செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதேபோல் குரூப் 4 தேர்வும் ஜூலை மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளுக்கும் தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் குரூப் 2 தேர்வு முடிவுகளாவது வெளியாகியிருக்க வேண்டும்.
இதனால் தேர்வர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவியது. தேர்வு முடிவுகள் வெளியிடாத காரணம் என்ன? என தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்தனர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு (Vertical Reservation) பதிலாக கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறையின் படி, பெண்களுக்கு முதலில் 30% இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, மீதமுள்ள இடங்களில் போட்டியிட அனுமதி மறுக்கப்படும். இந்த புதிய நடைமுறையின்படி தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதால் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் என கூறப்பட்டது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.