சேலம், அரியானுர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கல்யாண புரோக்கராக இருந்து வருகிறார். இவரின் உறவினரான வெங்கடாசலம் என்பவர் வீட்டில் சுமார் 6 மாதக்காலமாக தங்கி வந்துள்ளார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 8 -ம் தேதி வெங்கடாசலத்தை திடீரென அரியானூர் அருகே டீ கடையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். மறுநாள் காலையில் மகுடஞ்சாவடி டு வீரபாண்டி ரயில் தண்டவாளத்தில் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடாசலத்தின் தாய்மாமா ராமரிடம் விசாரித்தபோது, “வெங்கடாசலம் டிரைவராக வேலை பார்த்தது கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ அதிகாரி வீட்டில். அவரின் மகள் சரண்யாதான்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரினடிப்படையில் வெங்கடாசலம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஒ ரிட்டைர்டு ஆவதற்கு முன் சென்னையில் பணியாற்றி வந்ததும், அவருடைய மனைவியும், மகளும் கன்னங்குறிச்சியில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சரண்யா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனது அம்மாவுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிரைவாராக வெங்கடாசலம் அவரின் வீட்டிற்கு செல்ல, சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் என்னவென்று தெரியவில்லை சரண்யா திடீரென போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்மூலம் போலீஸார் வெங்கடாசலத்தை விசாரணைக்காக 8- ஆம் தேதி அழைத்து சென்றனர். பின்னர் என்னை டவுன் ஸ்டெசனுக்கு விசாரணைக்காக வர கூறியிருந்தனர். நானும் சென்றிருந்தேன். விசாரணை செய்த ஏ.சி வெங்கடேக்ஷ், சரண்யாவிடம் வெங்கடாசலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாக கூறினார். அதன்மூலம் சரண்யாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி கூறினார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டு பணத்தை தருவதாக எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டோம்.
அன்று இரவு வெங்கடாசலம் நல்லாதான் பேசிட்டு இருந்தான். ஆனா திடீரென 12.30 மணிக்கு கொல்லையில் நாய் கத்துவதை பார்த்து எழுந்துபோய் வெங்கடாசலம் படுத்துட்டானான்னு பார்த்தேன். அங்க அவனை காணோம். நான் பதறிப்போய் தேட ஆரம்பிச்சுட்டேன். கடைசியில் காலையில் அவன் ரயிலில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக கேள்விபட்டு பதறிப்போயிட்டேன். அவன் கண்டிப்பாக தற்கொலை செஞ்சிருக்கமாட்டான். அவனை சரண்யாதான் எதாவது செஞ்சிருக்கணும்” என்றார்.

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யாவிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடைப்படையில் விசாரணை மேற்கொண்டதில் வெங்கடாசலம் அப்பெண்ணினை தவறான முறையில் படங்கள் எடுத்து மிரட்டியுள்ளான். அதுவும் இல்லாமல் அவரிடமிருந்து பணம் அதிகளவு மிரட்டி வாங்கியுள்ளான். இதனை விசாரித்து அவனது உறவினர்கள் மத்தியில் பணத்தை திரும்ப தரக்கூறி கூறியிருந்தோம். அவர்களும் தருமாறு ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர். இந்நிலையில்திடீரென ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.