ஊட்டி: தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை நம் நாட்டில் அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். அந்நாளில், தீமையை நன்மை வென்றது என்பதனாலும், அதனால் அனைவருக்கும் ஒளிமயமான வாழ்வு அமையவுள்ளது.
தீபாவளி ஒளித்திருநாளாக கருதப்பட்டு வண்ண வண்ண மத்தாப்புக்களை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன் ஒலியினை எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் ஏதுவாக அமையும். மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் புகையினால் காற்று மாசு ஏற்படவும், விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், மொத்த மாவட்டமும் உயிர் கோளப்பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலியலை கொண்ட பகுதியாகும். நம் மாவட்டம் பல்வேறு வகையான வன விலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இச்சூழலில், மாவட்டத்தில் பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின் அது மாவட்டத்தின் மென்மையான சூழலியலுக்கும், வன விலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, இதனை தவிர்த்து நம் மாவட்டத்தின் வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.
உச்ச நீதிமன்றம் 23.10.2018 அன்று பிறப்பித்த உத்தரவின்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை ஏழுப்பக்கூடிய தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். இதனை மீறுவோர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளர்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, தண்டமும் விதிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்கச் செய்யும்படியும், பட்டாசுகளை விபத்துகளின்றி வெடிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒளித்திருநாளாம் தீபாவளியை ஒலி மாசின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் விபத்தின்றியும் கொண்டாடி மகிழ்வோம்.
இந்த தீபாவளி பண்டிகை, நம் அனைவர் வாழ்விலும் நம்பிக்கை ஒளியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்பட்ட சுற்றுச்சூழலையும், கொண்டு வந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இவ்வாறு கலெக்டர் அம்ரித் கூறியுள்ளார்.