விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஆவாரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், பசவேஸ்வரன், முத்து லட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குழந்தை முத்துலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரீஸ்வரி மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது விழித்துக்கொண்ட குழந்தை முத்துலட்சுமி தாயை காணாமல் தேடிய போது வாசல் படி அருகே தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மாரீஸ்வரி உலர்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தபோது தனது குழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் பார்த்த போது குழந்தை முத்துலட்சுமி தண்ணீரில் மூழ்கி அசைவு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து குழந்தையை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.