திருமலை: புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 20 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.தற்போது ஐப்பசி மாதம் தொடங்கியதையொட்டி பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. அதன்படி, கோயிலில் நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 203 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 29 ஆயிரத்து 100 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ரூ.3.91 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 28 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.
