திருமங்கலம்: திருமங்கலம் அருகே எட்டுநாழி, விடத்தகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்மழை காரணமாக விளைநிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது.
திருமங்கலம் தாலுகாவில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. திருமங்கலம் அருகேயுள்ள எட்டுநாழி, எட்டுநாழிபுதூர், விடத்தகுளம், விருசங்குளம், மைக்குடி, கீழக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பூச்செடியான மல்லிகை உள்ளிட்டவைகளை சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் பெய்து வரும் மழையால் மழைநீர் வயல்வெளிகளில் புகுந்து பயிர்கள் மூழ்கியுள்ளன. தொடர்ந்து பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழைநீர் வயல்வெளிகளில் இருந்து வெளியேறி அருகேயுள்ள ஓடை கண்மாய்களுக்கு செல்ல உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் மழையால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் நஷ்டத்தை கணக்கிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து எட்டுநாழியை சேர்ந்த பருத்தி விவசாயி நடராஜன் கூறுகையில், ‘நான் 15 ஏக்கரில் பருத்தி, மல்லிகை, கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளேன்.
தொடர்மழையால் வயல்வெளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு சில நாள்களே இருக்கும் நிலையில் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நஷ்டம் உண்டாகியுள்ளது. அதிகாரிகள் பயிர்களை பார்வையிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்றார்.