முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை, மக்கள் ஏற்க மாட்டார்கள். என் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை, முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக, என்னிடம் எந்தவித விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாதவர்கள், அவரது மரணத்தை அரசியலாக்கி, வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை, யாரும் இனிமேல் ஆதரிக்க மாட்டார்கள். பொதுமக்களும், ஜெயலலிதா மரணத்தில், எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்.
உங்களின் அறிக்கையில், தி.மு.க.,வை பட்டும், படாமலும் திட்டுவது தெரியுது… அடுத்து விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதால், அடக்கி வாசிக்கிறீங்களோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
சட்டசபையில் சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை, ‘யாருக்கோ கட்டுப்பட்டு, ஹிந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதற்கு பயந்து, சபையில் கலகம் செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கின்றனர்’ என உள்நோக்கம் கற்பித்து பேசியது, அவர் நடுநிலை தவறி விட்டார் என்பதற்கான சாட்சி.

சபாநாயகர் இருக்கையில் இருந்தபடி, இப்படி பேசியது அழகல்ல.செம்மலை சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது!
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:
பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூரில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, கோடை காலத்திற்கான கொள்முதல் ஆணைகள், தற்போது, 40 சதவீதம் குறைந்துள்ளன. அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும், அவற்றின் குறு, சிறு நிறுவன வினியோகஸ்தர்களும், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளனர். இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர, ஆடை துறையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, சிறப்பு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை, உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தொழில் துறையில் அக்கறை செலுத்தும் மத்திய அரசு, இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்!
மாநில முதன்மை கணக்காய்வு தலைவர் – 1 அம்பலவாணன் பேட்டி:
தமிழக அரசின் மீதான, 2020 – 2021ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டன. 2016 – 17ல், 12 ஆயிரத்து 964 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2020 – 21ல், 62 ஆயிரத்து 326 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஐந்து ஆண்டுகளில், 381 சதவீதம் உயர்ந்துள்ளது.
அப்பாடா… அ.தி.மு.க., ஆட்சியை விமர்சிக்க ஆளுங்கட்சிக்கு அருமையான வாய்ப்பு கிடைச்சிடுச்சு!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு, உடனடியாக இப்பிரச்னையை கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து, வேளாண் பயிர் காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க., அரசு, இதிலும் கோட்டை விட்டு விடக்கூடாது.

‘வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டுள்ளோம்’ என பெருமை அடித்தவர்கள், காப்பீடு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தது அப்பட்டமாக தெரிகிறது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
‘நீர்த்தேக்கங்களில் வீடு கட்டுவது முறையற்ற செயல், அவற்றை நிச்சயமாக நாங்கள் அகற்றுவோம்’ என, அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்; வீடுகளை அகற்றுவது பெரிதல்ல. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், தனியார் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை அகற்ற துணிவு உள்ளதா, திராணியுள்ளதா?
நீங்க எதிர்பார்ப்பது நடந்து விட்டால், தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பிச்சு போயிடுமே!
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் தாஸ் பாண்டியன் பேச்சு:
காங்கிரஸ் தலைவராக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை தேர்ந்தெடுத்ததில் சோனியா, ராகுல், பிரியங்காவின் சுயநலம் அடங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கும் பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும் எதிர்கொள்ள காங்கிரசுக்கு திராணி இல்லை. அதனால் தான், தாழ்த்தப்பட்டோரை தேர்தல் போரில் நிறுத்தி, எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது.
பட்டியல் இனத்தவரை ஜனாதிபதி பதவிக்கு நீங்க நிறுத்தினா, ‘சமூக நீதியை காப்பாத்துறோம்’னு முழங்குறீங்க… அதையே எதிர்க்கட்சிகள் செய்தா, விமர்சிப்பதா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு, பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு, பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு, விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சம்பா பருவத்தில், தமிழக அரசின் சார்பில், காப்பீட்டு கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும், 1,339 கோடி ரூபாய். விவசாயிகள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை, 225 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக, 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 481 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியுள்ளன.

அரசிடமே காப்பீடு நிறுவனங்கள், தங்களது, ‘வேலை’யை காட்டினா, தனி மனிதர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளும்?
செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு:
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், சிலை மற்றும் அரங்கம் அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்து, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலைகள், அரங்கம் அமைப்பதில் மட்டுமே அமைச்சர் கவனம் செலுத்துற மாதிரி தெரியுது… துறையின் சார்புல ஆக்கபூர்வமா ஏதாவது நடந்திருக்குதா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்