கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் மோடியின் மகள் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி விஷயத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதை அவர்கள் ஒரு வியாபாரமாகச் செய்து வருகிறார்கள்.
ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி மற்றும் வேறு மொழிகள் கற்றுக்கொடுக்க முடியாமல், அதை வைத்து ஒரு இந்தி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
மேலும் இளம் வயதில் பெண்கள் விதவைகள் ஆவதற்கு மது முக்கிய காரணமாக இருக்கிறது. மது கொடுமையால் தந்தையை இழந்து, இளம் வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி தடைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். ஆனால் தமிழக அரசு தொடர்ச்சியாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறது.
கோவையில் கூட மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் மதுக் கடைகள் திறந்துள்ளன. ஒருபுறம் போதைப் பொருளுக்காக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின், மறுபுறம் ஒவ்வொரு தெருவிலும் மதுக் கடைகளைத் திறந்து வைத்து நாட்டில் இளம் விதவைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்.
போதைப் பொருளுக்காக எடுக்கும் உறுதிமொழி எல்லாம் கண்துடைப்பு நாடகமாக நாங்கள் பார்க்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சென்று பார்க்கும் போது தான் தெரிகிறது அவர்களின் துயரத்தையும், வேதனையையும் அறிந்து கொள்ளாத முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கிறார் என்று.
மது கொடுமையால் இறக்கின்ற ஆண்களின் குடும்பத்தை மதுக்கடைகளின் நடத்தும் தமிழக அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளி பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து இலக்கு நிர்ணயித்ததுக்குப் பதில், நாங்கள் ஆட்சிக்கு வந்து ரோடு இல்லாத பகுதிகளுக்கு ரோடு போட்டோம், எல்லா அரசுப் பள்ளிகளிலும் கழிவறை கட்டிக் கொடுத்தோம், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்குச் சுகாதாரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்பதே இலக்காக வைத்திருக்க வேண்டும்.
டாஸ்மாக்கிற்கு இத்தனை கோடி வருமானம் என்பது ஒரு அரசாங்கத்திற்கு இலக்காக இருக்கக் கூடாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்களும், அதாவது தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப் பின் மதுக் கடைகள் மூடி இருக்க வேண்டும்.
மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ரயில் நிலையம் அதிகமான வருமானத்தைத் தருகிறது. அதனை மேன்மைப்படுத்தி சர்வதேச தரத்திற்கு, உயர்த்துவதற்கு திட்டங்கள் தயாராக உள்ளது. தற்போது இந்த திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.