தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் விடுமுறை தீபாவளிவரை நீடிக்கிறது. அதேசமயம் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்கிழமை விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேசமயம், தீபாவளிக்கு மறுநாள் உடனடியாக பள்ளிகள் திறந்தால் மாணவர்களும், மாணவிகளும் சிரமப்படுவார்கள். எனவே செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்க வேண்டுமென்று கோரிக்கைகளும் வைக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாளான செவ்வாய் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித் துறைக்கு மட்டுமின்றி தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
எனவே இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார். செவ்வாய் கிழமை விடுமுறை குறித்து கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.