சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் அரசுப் பேருந்துகளில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 229 பேர் பயணம் செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதாலும், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதாலும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதன்படி சென்னையில் இருந்து இன்று (அக்.22ம் தேதி ) மதியம் 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளில் 1065 பேருந்துகளும், 407 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. நேற்று (21ம் தேதி ) முதல் இன்று (22ம் தேதி) மதியம் 3 மணி 4,772 பேருந்துகளில் 2,43,299 பயணிகள் சொந்து ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.