காந்திநகர்: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 21 – 27 ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு குஜராத் மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது” என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
சூரத் நகர காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “குஜராத் மாநிலத்தில் அக்.21ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை போக்குவரத்து விதி மீறல்களுக்காக பிடிக்கப்படும் யாருக்கும் அபராதம் விதிக்கப்படாது. மாறாக காவல்துறையினர் அவர்களுக்கு ரோஜா பூ வழங்குவார்கள். பண்டிகை காலத்தில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அபராதம் கட்டுவதை விட சின்ன சின்ன பொருட்களை வாங்க மக்களுக்கு பயன்படும் என்பதால் மக்களின் நலன் கருதி இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. ஆனாலும் யாரும் விதி மீற நினைக்காமல், பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, “தீபாவளி என்பது தீபங்களின் மிகப்பெரிய திருவிழா. அது வண்ணமயமான ரங்கோலி, இனிப்பு, ஒளிவிளக்குகள், வெடிகள், கொண்டாட்டத்துடன் இணைந்து வருகிறது. இந்த பண்டிகை நேரத்தில் முதல்வர் பூபேந்திர பாடீல் ஜி மக்கள் நலன் சார்ந்த இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.