வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தீபாவளி என்றாலே ‘நான் வெஜ்’ இல்லாமலா? அசைவப் பிரியர்கள் எல்லோருமே தீபாவளி அன்று அமாவாசை இல்லாத பட்சத்தில், மட்டன் குருமா, ஆட்டுக்கால் பாயா… என்று வீட்டில் செய்யச் சொல்லி நிதானமாக சாப்பிடுவது ப(வ)ழக்கம் அவர்களுக்காக இதோ அந்த ரெசிபிகள் சுலபமான முறையில்…
ஈஸி மட்டன் குருமா
தேவையான பொருட்கள்
மட்டன்- அரை கிலோ
பெரிய வெங்காயம்- 1/4 கிலோ தக்காளி- 1/4 கிலோ
மிளகாய் தூள் -இரண்டு டீஸ்பூன் தனியாத்தூள்- 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய்- அரை மூடி
கசகசா – 1டீஸ்பூன்
முந்திரி 4
இஞ்சி சிறு துண்டு
பூண்டு ஆறு பல்
பச்சை மிளகாய் 4
பெருஞ்சீரகம் -ஒரு டீஸ்பூன்
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை-
தலா 2
தயிர் அரை கப்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
பொடியாக நறுக்கிய மல்லி தழை,,புதினா சிறிதளவு

செய்முறை
பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ,போட்டு வதக்கி, தயிர் சேர்த்து பின்பு மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன்+பொடியாக நறுக்கினபுதினா சேர்த்து நன்கு வதக்கி அது மூழ்கும் வரை நீர் விட்டு பிரஷர் பேனை மூடி வெயிட் போடவும். நான்கு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு இறக்கவும். தேங்காய் துருவல், கசகசா, இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை அரைத்து குழம்பில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும்,( தேவையெனில்) ஒரு டீஸ்பூன் கெட்டியான புளி கரைசல் ஊற்றி இறக்கவும். சுட சுட மல்லி பூ இட்லி மேலே ஊற்றிக் கொள்ள மட்டன் குருமா .. அடப் போங்கங்க..
வாழ்க்கைல வேற என்ன வேணும்?! இவ்ளோ கஷ்டப்படுறதும் நல்லா சந்தோஷமா சாப்பிடுவதற்கு தானே! ன்னு நீங்க சொல்றது காதுல விழுது இதோ உங்களுக்காக கம கம ‘ஆட்டுக்கால் பாயா’ரெஸிபி
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால்-8
பெரிய வெங்காயம் -6
தக்காளி- 6
இஞ்சி -50 கிராம்
பச்சை மிளகாய்- எட்டு
பூண்டு- 50 கிராம்
மிளகாய்த்தூள்- 4 டீஸ்பூன் தனியாத்தூள்- 6 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன்
தாளிக்க
மிளகு -நாலு டீஸ்பூன்
பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் உப்பு- தேவையான அளவு

செய்முறை
குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக்கால்கள், வெட்டிய வெங்காயம், தக்காளி , பூண்டு, நறுக்கிய இஞ்சி கீறிய பச்சை மிளகாய், மிளகாய்த் தூள் தனியா தூள் ,மஞ்சள் தூள், எல்லாவற்றையும் போட்டு எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து அதிகபட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வேக விட வேண்டும்.( ஆட்டு காலில் சதை கழன்று விடும் வரை வேக விட வேண்டும் )எண்ணெயில் பெருஞ்சீரகம் ,கறிவேப்பிலை தாளித்து பாயாவில் கொட்டவும் .உப்பு சேர்த்து மிளகை ஒன்றிரண்டாக ப் பொடித்து தூவி இட்லியின் மேல் ஊற்றி சுடசுட சாப்பிட சுவையில் அசத்தும் இந்த பாயா .
ஆட்டுக்கால் பாயாவை இன்னும் இரண்டு முறைகளிலும் செய்யலாம்.
1. மேலே சொன்ன செய்முறைகளின் படி பாயா தயாரித்த பிறகு முதல் தேங்காய் பால் 1கப் சேர்த்து கலக்க வேண்டும்.
2. மேலே சொன்ன செய்முறைகளின் படி பாயா தயாரித்துவிட்டு ஒரு கப் தேங்காய் துருவல், இரண்டு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் நன்கு அரைத்து ஊற்றிக் கலந்து பிறகு தாளிக்க வேண்டும். இட்லி, தோசை என எல்லா உணவுக்கும் இந்த பாயாவை தொட்டுச்சாப்பிடலாம். ..சுவை அபாரமாக இருக்கும்.
ஆனா…நாங்க ‘வெஜ்’ங்க..எங்க வீட்ல தீபாவளி அன்று இட்லி /வடகறி தாங்க !அப்படின்னு சொல்றவங்களுக்கு இதோ சுலபமான முறையில்’ வடகறி’ ரெசிபி.
வடகறி என்பது குறிப்பாக சென்னையின் புகழ் பரப்பும் சைட்டிஷ் களில் ஒன்று .
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு -ஒரு கப்
பெரிய வெங்காயம்- 3
தக்காளி -3
தேங்காய் பால் -ஒரு கப்
புதினா, மல்லித்தழை -சிறிதளவு மிளகாய் தூள்- ஒரு டீஸ்பூன
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு எண்ணெய் -தேவையான அளவு அரைக்க
இஞ்சி சிறு துண்டு
பூண்டு -ஆறு பல்
பெருஞ்சீரகம்- 2 டீஸ்பூன்
பட்டை,லவங்கம், ஏலக்காய் தலா ஒன்று
பச்சை மிளகாய் 4

செய்முறை
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும் .அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். அந்த மசாலா விழுதிலிருந்து சிறிதளவு எடுத்து கடலை பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையை காய வைத்து சிறு சிறு பகோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
வெங்காயம் ,தக்காளியைப் பொடியாக நறுக்கவும் .அடி கனமான வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும் தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய் தூள் ,மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய புதினா மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் .பிறகு பாதி அளவு தேங்காய் பால் +ஒரு கப் தண்ணீர் ,தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதில் பக்கோடாக்களை உடைத்து போடவும். இது மேலும் ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் மீதி உள்ள பாலை சேர்த்து கிளறி இறக்கவும். (தளதளவென இல்லாவிட்டால் சிறிது சூடான நீரை சேர்க்கவும் ‘வடகறி’ தயார்) சூடான இட்லிக்கு இந்த’ வடகறி’ தொட்டு சாப்பிட … எத்தனை சாப்பிட்டோம் என்ற கணக்கே இல்லாமல் இட்லி உள்ளே இறங்கும். சைவப் பிரியர்கள் வடகறியையும் அசைவ பிரியர்கள் ஈஸியான மட்டன் குருமாவையும் செய்து தீபாவளியை மிகுந்த மன மகிழ்வுடனும் மனநிறையுடனும் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அழகான தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.