சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று வர்த்தகம் களைகட்டியது. துணி, நகை, பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை காரணமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் நேற்று மாலை முதலே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். மேலும், நேற்று காலையிலிருந்தே ஜவுளி, பட்டாசுக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.
சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா நகர், வடபழனி, பள்ளிக்கரணை, குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் மக்கள் குவிந்தனர். இதையொட்டி, பாதுகாப்புப் பணியில்18 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், போலீஸார் கண்காணித்தனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் மின்சார ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் கொண்டுவந்த உடைமைகளைப் பரிசோதித்து, பட்டாசுகள் வைத்திருந்தவர்களை திருப்பிஅனுப்பினர்.
அதிக அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. கோவையில் முக்கியவணிக வளாகங்கள் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, ராஜவீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை உள்ளிட்ட இடங்களில், ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். இதையொட்டி, 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாசி, சித்திரை வீதிகளில் மக்கள் குவிந்தனர். டவுன்ஹால் சாலை, காமராஜர் சாலை, அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்டபகுதிகளில் ஜவுளி, இனிப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இடையிடையே பெய்த மழையையும் மக்கள் பொருட்படுத்தவில்லை. இதேபோல, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், பழநி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பஜார்களிலும் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர். முக்கிய பஜார்களில் நான்கு சக்கரவாகனப் போக்குவரத்துக்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர்.
மழையால் வியாபாரம் பாதிப்பு
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலையில் தொடங்கி, இரவிலும் நீடித்த மழையால் வியாபாரம் மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, பட்டாசு விற்பனை வெகுவாகப் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி என்.எஸ்.பி. சாலை, சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் திரண்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி நேரு வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே கூட்டம் அலைமோதியது. நெரிசலைக் கட்டுப்படுத்த, நகர்ப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில், சுற்றுவட்டார கிராம மக்கள் குவிந்ததால், அப்பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் நேற்று காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது.
சேலத்தில் முதல் அக்ரஹாரம், கடைவீதி, ஓமலூர் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, ஆத்தூர், மேட்டூர்,எடப்பாடி உள்ளிட்ட நகரங்களில் கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர்.
ஈரோட்டில் முக்கிய ஜவுளிச் சந்தையான கனி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் டவுன், தருமபுரி, கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளில் புத்தாடை வாங்க மக்கள் திரண்டனர். அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.