தொழில்துறையின் பிரபல பத்திரிகையாளர் விஸ்வநாதன் காலமானார்!

சென்னையில் இருந்து வெளியாகும் தொழில் துறை பத்திரிகையான ‘The Industrial Economist’ பத்திரிகையின் நிறுவனர் – ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

தொழில் துறை உலகில் உள்ள பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர் விஸ்வநாதன். தனது 24 வயதில் ‘த இன்டஸ்ட்ரியல் எக்னாமிஸ்ட்’ என்கிற பத்திரிக்கையை பிசினஸ் மற்றும் இன்டஸ்ட்ரி தொடர்பான செய்திகளை மட்டும் வெளியிடுவதற்காகத் தொடங்கினார். லண்டனில் இருந்து வெளியாகும் ‘The Economist’ பத்திரிகையைப் படித்து, அதைப் போன்ற ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் என்கிற உந்துதலில் ‘த இன்டஸ்ட்ரியல் எக்னாமிஸ்ட்’ பத்திரிகையை 1962-ல் தொடங்கினார்.

Industrial Economist

அன்றிலிருந்து இன்று வரை தொழில் துறை தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக ஓய்வின்றி உழைத்தார் விஸ்வநாதன். நம் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 60-களில் அனைவருக்கும் சைக்கிள் என்கிற தேவை பிறந்தபோது, லூதியானாவில் சைக்கிள் எப்படித் தயாராகிறது என்பதை அங்கு நேரில் சென்று பார்த்துவந்து எழுதினார்.

பிற்பாடு இருசக்கர மோட்டார் சைக்கிள்கள் வந்தபோதும் ஹீரோ ஹோண்டாவின் தொழிற்சாலைக்கு நேரடியாக போய் பார்த்துவந்து எழுதினார். மாருதி கார் நம் நாட்டில் முதன்முதலில் தயாரானபோதும் அந்தத் தொழிற்சாலைக்கு நேரில் போய் பார்த்து வந்து எழுதினார். கடந்த 60 ஆண்டுகளில் நடந்த பொருளாதார மாற்றங்களை நேரடியாக பார்த்து, அதன் பாசிட்டிவ்-ஆன, நெகட்டிவ்-ஆன விஷயங்கள் பற்றி எழுதியவர் விஸ்வநாதன்.

பொருளாதார பத்திரிகை எடிட்டர்களுக்கான மாநாடு 1973 -ம் ஆண்டு தொடங்கியது. இந்த மாநாட்டில் தொடர்ந்து 44 ஆண்டுகளாக கலந்துகொண்ட பெருமை விஸ்வநாதனுக்கு உண்டு.

S.Viswanathan with Manmohan Singh

பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி பல பிரதமர்கள், நிதி அமைச்சர் மொராஜி தேசாய் தொடங்கி நிர்மலா சீதாராமன் வரை பல நிதி அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட அனைத்துத் திட்டங்களைப் பற்றியும் அவர் பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.

இந்தியா முழுக்க உள்ள தொழிலதிபர்களுடன் அவர் நேரடியாக பழகி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள மூத்த தொழிலதிபர்கள் அனைவருக்கும் அவரைப் பற்றி நன்கு தெரியும்.

84 வயதான நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய மகளின் வீட்டில் சென்று சில வாரங்கள் அவரது மனைவி பத்மாவுடன் சென்று தங்கிவிட்டு வந்தார். சிகாகோவில் இருக்கும் அவரது மகன் பாலசுவாமிநாதனுடன் சில நாள் தங்கினார்.

எஸ்.விஸ்வநாதன்

சில வாரங்களுக்கு முன் சென்னை திரும்பியவுடன், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ல் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மருத்துவர்களின் கடுமையான முயற்சி பலன் அளிக்காத நிலையில், இன்று காலை இறந்தார்.

விஸ்வநாதனின் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தொழில் துறை தொடர்பான பத்திரிகை உலகில் அவரை ஒரு பிதாமகன் என்றே சொல்லலாம். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே சொல்லலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.