காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள நட்சத்திர உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் மிகப் பெரிய கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் கீழண்டை தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்(51), நவீன்குமார்(30), திருமலை(25) ஆகிய 3 பேரும் உள்ளே இறங்கியுள்ளனர். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். மயங்கி விழுந்ததால் நீந்த முடியாமல் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்த நீரை வெளியேற்றி விட்டு சகதிக்குள் தேடி அதிலிருந்து 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். அவற்றை பெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை மற்றும் கட்சிப்பட்டு பகுதியில் டி.எஸ்.பி. சுனில் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவம் தொடர்பாக நட்சத்திர விடுதி உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்குமார், ரஜினி ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் 2021-ல் பெரும்புதூரில் தனியார் கேட்ரிங் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது 3 பேர் இறந்தனர்.