நாகை அருகே கதவணை உடைப்பு 3,100 ஏக்கர் சம்பா தண்ணீரில் மூழ்கியது: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வரும் 29ம் தேதியில் இருந்து தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் நேற்றிரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கத்தில் நேற்று மாலை சிறிது நேரம் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த மழை கொட்டியது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருப்பது தெற்குராஜன் வாய்க்கால். இதில் தண்ணீர் அதிகப்படியாக சென்றதால் மகேந்திரப்பள்ளி கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து செல்லும் இடத்தில் கட்டப்பட்டிருந்த கதவணையில் கான்கிரீட் சுவரில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் கதவு விலகி, வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்தது.  மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை, அளக்குடி, கோரை திட்டு ஆகிய கிராமங்களில் 2,000 ஏக்கர் நேரடி விதைப்பு பயிர் மூழ்கியது.

இதேபோல் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி குடியிருப்பு  பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது.  தற்காசு, புளியந்துறை மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 1100 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
உப்பு உற்பத்தி பாதிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பளங்களிலும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. இதனால் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.