ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் வெளியூரைச் சேர்ந்த ஒருவர் நண்டு கம்பெனி வைத்துள்ளார். இதனால் கிராமத்திற்கு ரூ.5 லட்சம் கட்ட கூறியுள்ளனர். ஆனால் ரூ.3 லட்சம் மட்டும் கிராமத்திற்கு கம்பெனி நிர்வாகம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பூமிராஜன் கம்பெனி உரிமையாளருக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். இதனை காரணம் காட்டி பூமிராஜன், அவரது தம்பி காளிமுத்தன், சகோதரி வள்ளியம்மாள் ஆகிய மூன்று குடும்பத்தினரை கிராம தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சங்கிலி, பொருளாளர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கிராமத்தில் இருந்து 3 குடும்பங்களை தள்ளி வைத்துள்ளதாகவும் கிராமத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு மற்றும் சுப ,துக்க காரியங்களுக்கு கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த 3 குடும்பத்தினர் திருவாடானை நீதிமன்றத்தில் தங்களை கிராமத்தில் இருந்து தள்ளி வைத்த கிராம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.வழக்கை விசாரித்த நீதிபதி கிராம நிர்வாகிகளை எச்சரித்து 3 குடும்பத்தினரை கிராமத்தில் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
ஆனால் நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி தங்களை கிராமத்தில் சேர்த்துக் கொள்ளாமல் கிராம நிர்வாகம் தங்களை தள்ளியே வைத்து இருப்பதாகவும். கிராமத்தில் நடக்கும் சுபதுக்க நிகழ்வுகளுக்கு அனுமதிக்க மறுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தான் படிக்கும் பள்ளியில் தன்னோடு சேர்த்து யாரும் பேசவோ விளையாடவோ வருவதில்லை என்றும் ஏன் என்று கேட்டால் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக சொல்வதாகவும் இது தனக்கு மன வேதனையும் சரியாக தன்னால் படிக்க முடியவில்லை என்று 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். நாம் இதுகுறித்து வட்டாட்சியர் செந்தில்வேல் முருகனிடம் கேட்டபோது விசாரனை செய்து வருவதாகவும் கிராம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.