புதுச்சேரி அ.தி.மு.க.வின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, இந்தியாவில் பிற மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிறப்பான ஆட்சியை நமது முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி வருகிறார். இந்த நேரத்தில் கூட்டணியில், பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்களுடைய பதவிக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருசிலர் ஆவல் மிகுதியில் அரசின் திட்டங்களையும், தங்களுக்கு சம்பந்தமில்லாத நிதி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து அவசரப்பட்டு செய்திகளை வெளியிடுகின்றனர். இதனால் அரசுக்கு எதிராக செயல்படக்கூடிய எதிர்கட்சிகளுக்கு நாம் வாய்ப்பு கொடுக்கும் வகையில் நிலை ஏற்படுகிறது. இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2,000/- கோடியை கூடுதல் நிதியாக முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் கேட்டிருந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு ரூ.1,400 கோடி/- ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக சபாநாயகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதிலும் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கும், மேம்பாலங்கள் கட்டுவதற்கும், சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகியவற்றிற்கு பணம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பணம் என்பது மத்திய அரசு ஊக்குவிப்பு திட்டங்களுக்கு வழங்கும் நிதியா அல்லது திருத்திய மதிப்பீட்டில் நமக்கு வழங்கப்படும் நிதியா என்பது தெரியவில்லை. அப்படியே திருத்திய மதிப்பீட்டு நிதியாக இருந்தாலும், நாடாளுமன்றம் கூட்டப்பட்டு அதில் புதுச்சேரி மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்படும். ஆனால் அதற்கு முன்பாகவே மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் ஒரு நிதி அமைச்சர் போன்று இந்த தகவலை வெளியிடுகிறார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு நம் அரசு ஆளாக்கப்டுகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் தங்களது பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்து உயர் பதவியில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் சூதாட்ட மாஃபியா கும்பல்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இங்கு அரசு அனுமதியுடன் மூன்று சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் பலகோடி ரூபாய் அளவிற்கு பணம் வைத்து சூதாடி வருகின்றனர். அந்த பகுதியில் பம்பாய், கோவா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல சூதாட்ட மாஃபியா கும்பல்கள் தினந்தோறும் வந்து செல்லக் கூடிய இடமாக ஏனாம் மாறியுள்ளது. சூதாட்ட கிளப் சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அரசு சூதாட்டத்தை தடை செய்ய சரியான வாதங்களை எடுத்து வைக்காமல் சூதாட்ட முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டிருக்கிறது. இந்த மூன்று சூதாட்ட கிளப்புகளை சுட்டிக்காட்டி, உள்ளுரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சூதாட்ட கிளப் நடத்துகின்றனர். இவை அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் வேடிக்கை பார்த்து வருகிறது. சூதாட்டம் நடத்துவதற்கு முதலில் அனுமதி கொடுத்த உள்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பம்பாய், கோவா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சூதாட்ட மாஃபியா கும்பல்கள், தினம்தோறும் வந்து செல்ல கூடிய இடமாக புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் மாறிவிட்டது. நான்கு பிராந்தியங்கள் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே எங்கும் சூதாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், ஏனாமில் மட்டும் சூதாட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது ? ஏனாம் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த சூதாட்ட கிளப்புகளினால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசு மீது அந்த பகுதி மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து ஏனாம் பகுதியில் சூதாட்டம் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற சூதாட்ட கிளப் நடத்துவதற்கு அரசியல் சார்பு உள்ளவர்கள் ஆதரவளிப்பது வெட்கக்கேடான செயல்” என்றார்.