எங்களுடையது மிகவும் ஏழ்மையான கிராமத்து குடும்பம். நான், தம்பி என வீட்டில் இரண்டு பிள்ளைகள். நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கல்லூரியில் படிக்கவைக்க வீட்டில் பொருளாதார வசதி இல்லை. எனவே, நகரத்தில் இருந்த பெரியம்மாவிடம் என் அம்மா, தங்கள் பெற்றோரது பூர்விக வீட்டில் தனது பங்கையும் அவரையே எடுத்துக்கொள்ளச் சொல்லியும், பதிலுக்கு என்னை அவர்கள் வீட்டில் தங்கவைத்து, கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தை கட்டும்படியும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே, நான் பெரியம்மா வீட்டில் தங்கி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன்.

பெரியம்மாவுக்கு ஒரே ஒரு பெண். அந்த அக்கா, நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து படித்த காலத்தில் தங்கையாக நினைக்காமல், எப்போதும் கொஞ்சம் தாழ்த்தியேதான் என்னை பார்ப்பார். எங்கள் வீட்டு ஏழ்மை நிலைதான், அவரை அப்படி என்னை நடத்தவைத்தது என்பதால், எனக்கு அதில் பெரிதாக வருத்தம் இருந்ததில்லை. ஏனென்றால், எங்கள் உறவினர்களில் பலரும் வசதியானவர்கள் என்பதால், உறவுக் கூட்டத்தில், நானும் என் தம்பியும் எப்போதுமே மற்றவர்களைவிட குறைவாகவே நடத்தப்படுவது, எங்களுக்குப் பழகிய ஒன்றாகிவிட்டிருந்தது.
இந்நிலையில், படிப்பை முடித்ததும் நான் ஒரு வேலையில் சேர்ந்தேன். பெரியம்மா வீட்டில் இருந்து வெளியேறி ஹாஸ்டலில் தங்கினேன். அப்போது என் தம்பி கல்லூரியில் சேர, அவன் கட்டணத்தை நானே கட்டுமளவுக்கு என் சம்பளம் இருந்தது. தம்பி மூன்று வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்தபோது, ‘அக்கா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் பண்ணலாம்’ என்றான். சரி வருமா என்று ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், வங்கிக் கடன் பெற்று துணிந்து இருவரும் தொழிலில் இறங்கினோம். இருவருமாக 200% உழைப்பை போட்டதால், நாங்கள் நினைத்ததைவிட பெரிய வெற்றி கிடைத்தது. முதல் வருடத்தில் எங்கள் பெற்றோர் கடனை எல்லாம் அடைத்து, கிராமத்தில் எங்கள் பூர்விக வீட்டை சரிசெய்தோம். இரண்டாம் வருடம், எங்கள் அக்கவுன்ட்டில் நாங்கள் எதிர்பாரா அளவுக்கு பணம் சேர்த்தோம். மூன்றாவது வருடம், என் தம்பி வற்புறுத்தி என் திருமணத்தை முடித்தான்.

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இப்போதும் நானும் தம்பியும் சேர்ந்து தொழிலை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். வருமானத்தை சரி பாதியாகப் பிரித்துக்கொள்கிறோம். நான் கார் வாங்கிவிட்டேன். அடுத்து, லோனில் வீடு வாங்கப்போகிறேன். இப்படி, மளமளவென வளர்ந்து இப்போது நானும் என் தம்பியும், எங்கள் உறவினர்கள் முன், அவர்கள் யாருக்கும் குறைவில்லாத வகையில் பொருளாதாரத்தில் எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறோம். உறவினர்களில் பலர், ‘கஷ்டப்பட்ட பிள்ளைங்க, உழைச்சு இன்னிக்கு தலையெடுத்துடுச்சுங்க’ என்பார்கள் எங்களை வியந்து பார்த்து. சிலர், ‘இதுங்களுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தியா? எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்’ என்பார்கள். எதையும் நாங்கள் கண்டுகொள்வதில்லை.
ஆனால், எங்கள் பெரியம்மாவுக்கும், அவர் பெண்ணுக்கும் எங்கள் மீது ஏற்பட்ட பொறாமை, காழ்ப்புணர்ச்சியாக வளர்ந்துகொண்டிருப்பதைதான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை எங்களுக்கு. வறுமை காரணமாக அவர்கள் வீட்டில் தங்கிப் படித்த பெண், இன்று அவர்கள் பெண்ணைவிட நல்ல பொருளாதார நிலையில் இருப்பதை பெரியம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போல, அக்காவும் என் மீது மிகவும் பொறாமைகொண்டுள்ளார். அது திகுதிகுவென வளர்ந்து, என் வளர்ச்சிக்கு, வாழ்க்கைக்கு இடையூறு செய்யும் அளவுக்கு அவர்களை செயல்படவைப்பதுதான் கொடுமை.

ஆம்! என் பெரியம்மாவும், அக்காவும் என் புகுந்த வீட்டில், என் பிறந்து வீட்டை பற்றியும், என்னைப் பற்றியும் எப்போதும் மட்டம்தட்டியே பேசுகிறார்கள். ’அவங்க அப்பாவுக்கு பிழைக்கத் தெரியாம, சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம இருந்தாங்க…’ என்றெல்லாம் சொல்கிறார்கள். என் கணவரோ, மாமனார், மாமியாரோ அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும், எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்தானே? நாளையே, என் மாமியாருக்கு என்னுடன் ஏதாவது ஒரு மன வருத்தம் ஏற்பட்டால், இவர்கள் கூறியதை எல்லாம் என்னைக் காயப்படுத்த சொல்லிக்காட்டலாம்தானே?
இதேபோல, உறவுகளிடத்திலும், ‘அவளும் அவ தம்பியும் காசு வந்ததுக்கு அப்புறம் நம்ம யாரையுமே மதிக்கிறதில்ல’ என்றெல்லாம் அபாண்டமாகப் பேசுகிறார்கள் பெரியம்மாவும் அவர் பெண்ணும். அதற்கு மேல் சென்று, அவர்களுக்குத் தெரிந்த எங்கள் கஸ்டமர்கள் சிலரிடம், ’அவங்க செய்ற உணவுத் தொழில்ல நிறைய கலப்படம் இருக்கு. நானே பார்த்திருக்கேன்’ என்றெல்லாம் உண்மைக்கு புறம்பாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் விட உட்சபட்சமாக, என் தம்பியிடமே சென்று, ‘உன் அக்காவ நீ முழுசா நம்புற. ஆனா, அவ கணக்கு வழக்குல எல்லாம் உன்னை ரொம்ப ஏமாத்துறா. பார்த்து இருந்துக்கோ…’ என்று கூறியுள்ளார்கள்.

நம்மை புறம்பேசுபவர்களை, பொறாமைகொள்பவர்களை, வெறுப்பவர்களை கவனிப்பதைவிட, அவர்களுக்கு பதில் சொல்வதைவிட, நமக்கு வேலைகள் நிறைய உள்ளன என்பதால், நான் இவர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் என் தம்பி, ’இதற்கும் மேல் நீ பொறுக்காதே. அவர்களை கண்டித்துப் பேசு. உறவினர்களிடமும், என்னிடமும் பேசுவதைகூட, அதுதான் அவர்கள் லட்சணம் என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், நம் கஸ்டமர்களிடம் தொழிலுக்கு விரோதமாக பேசுவதை அனுமதிக்க முடியாது’ என்று கோபப்படுகிறான். இந்த ஹேட்டர்ஸை (Haters) எப்படி கையாள்வது?