புதுடில்லி : மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி சேனல் நடத்த அல்லது அது தொடர்பான வினியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், தமிழக அரசு நடத்தும் கல்வி ‘டிவி’யின் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ 2012ல் ஒரு பரிந்துரை அளித்திருந்தது.
இதில் அரசுகள், தனியார் துறையுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்களை, தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுஇருந்தது.
புதிய முடிவு
இதன் அடிப்படையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அது தொடர்பான சேவை வினியோகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது.
இதுவரை அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், வரும் டிச., 31க்குள் அந்த நடவடிக்கையிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
ஒளிபரப்பு நடவடிக்கை
ஏற்கனவே இதுபோன்ற ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இனிமேல் அவை, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய சில ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாக, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுஉள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் சட்டம் இயற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், தமிழக அரசு நடத்தும் கல்வி டிவி, ஆந்திர மாநில அரசு நடத்தும், ‘ஐ.பி.டிவி’ ஆகியவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்