சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசால் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிறுவனம் என்ற சிறப்ப நிறுவனத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிர்வாகக் குழுவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைவராக செயல்படுவார். உறுப்பினர்களாக நிதித்துறை, தொழில்துறை, வனத்துறை, கால நிலை மாற்றத்துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுக சுற்றுச்சூழல் திட்ட 6வது செயல் இயக்குனர் எரிக் சோலிகம், நிலையான நீடித்த கடற்கரை மேலாண்மை மையத்தல் நிறுவனர் ரமேஷ் ராமசந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, தலைமை செயலாளர், திட்டக் குழு துணைத் தலைவர், கால நிலை மாற்றத்துறை, தொழில்துறை, நகராட்சி நிர்வாக துறை, நிதித்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி துறை, வீட்டு வசதி துறை, கால் நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை, விவசாயத் துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.