புதுடெல்லி: குஜராத் மாநிலம் காந்தி நகரில் 12-வது ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கண்காட்சி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நீண்ட நாட்கள் எடுக்கக்கூடியது. தளவாடங்கள் நம்மை வந்தடையும்போது உலகம் எங்கோ சென்றிருக்கும். இந்திய – சீனா எல்லைப் பிரச்சினையின்போது தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக நான் வெளிநாடுகளுக்கு மூன்று முறை சென்று வந்தேன்.
இது போன்ற அவசர சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் தளவாடங் கள் கிடைப்பது மிகவும் அரிதானது. உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் இதற்கு தீர்வாகும். உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புத் துறையின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றுமதி மிக அவசியமானதாகும். மத்திய அரசு 2025-ம் ஆண்டுக்குள் இந்திய ஆயுத ஏற்றுமதியை ரூ.41,500 கோடியாக (5 பில்லியன் டாலர்) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் இந்தக் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகின் ஆயுதத் தயாரிப்பு மையமாக இந்தியா மாறும் என்பதை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டியுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். கடந்த 18-ம் தேதி தொடங்கிய ராணுவ தளவாட கண்காட்சி இன்றோடு நிறைவடைகிறது.