இடாநகர் : அருணாச்சல பிரதேசத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நான்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில், தேடப்பட்டு வந்த ஐந்தாவது வீரரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற இடத்தில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் பயிற்சிக்காக புறப்பட்டது.
இது, நம் அண்டை நாடான சீன எல்லைக்கு ௩௫ கி.மீ.,க்கு முன் உள்ள மிக்கிங் என்ற கிராமத்தின் அருகே, அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது.
இதில் சென்ற ஐந்து வீரர்களும் மாயமாகினர். ராணுவம் மற்றும் விமானப் படையினர் சேர்ந்து, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து, ஐந்தாவது வீரரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தேடப்பட்டு வந்த வீரரின் உடலும் நேற்று மீட்கப்பட்டது.
”பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐந்து வீரர்களும் உயிரிழந்துவிட்டனர். இவர்களது அடையாளங்கள் தெரியவந்துள்ளன. பயிற்சிக்கு வானிலை உகந்ததாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்.
”இது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது,” என, ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஏ.எஸ். வாலியா தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்தில், ௧௯௯௫ முதல் இதுவரை நடந்துள்ள ௧௩ ஹெலிகாப்டர் விபத்துகளில், ௪௭ பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement