மேற்குவங்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், அகில பாரத இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில், மகிஷாசுரன் இருக்கவேண்டிய இடத்தில் காந்தியைப் போன்ற உருவ அமைப்பில் ஒரு சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

மேலும் இந்த சர்ச்சையில், அகில பாரத இந்து மகாசபையின் மாநில தலைவர் சுந்தரகிரி மகாராஜ், “உண்மையைப் பகிரங்கமாகப் பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது” எனக் கூறியது மேலும் சர்ச்சையானது. இந்த நிலையில் சுந்தரகிரி மகாராஜ் தற்போது, ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்குப் பதில், தேசிய சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி படம் இடம்பெறவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரகிரி மகாராஜ், “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பு என்பது மகாத்மா காந்தியின் பங்களிப்பை விடக் குறைவானது அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். அதோடு, இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியைக் கெளரவிப்பதற்கான சிறந்த வழி, ரூபாய் நோட்டுகளில் அவரின் படத்தை வைப்பதுதான்.

எனவே, ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்குப் பதில் நேதாஜியின் படம் இடம்பெறவேண்டும்” எனக் கூறினார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில பஞ்சாயத்துத் தேர்தலில், அகில பாரத இந்து மகாசபை போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் சுந்தரகிரி மகாராஜ் தெரிவித்தார்.