காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் தாசில்தார் அலுவலக தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் ‘ஆடியோ, வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், பட்டா பெயர் மாற்றம், பட்டா பெறுதல் போன்ற பணிகளுக்கு, ‘செட்டில்மென்ட்’ தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் விண்ணப்பிக்கின்றனர். அவர்களிடம் சொத்துக்களின் அளவுகளை பொறுத்து, 5,௦௦௦ ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது என, நீண்ட காலமாகவே புகார் உள்ளது. செட்டில்மென்ட் தாசில்தார் மற்றும் சர்வேயர் போன்ற அதிகாரிகள் மீது, உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.
இந்நிலையில், பட்டா மாற்றம் தொடர்பாக, காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த, டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம், அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்கும், ‘ஆடியோ’ பதிவும், ‘வீடியோ’ பதிவும் வெளியாகியுள்ளது. அதில், ‘உங்களிடம் லஞ்சம் பெற்றுதான், எங்களுக்கு சம்பளம் வழங்குகின்றனர்’ என, பெண் ஊழியர் கூறுகிறார்.
இந்த ஆடியோவும், வீடியோவும் வெளியானதால், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மனுதாரர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகியோரிடம், நேற்று விசாரணை நடத்தியுள்ளார். தொடர்ந்து, தாசில்தார் மோகன் மற்றும் ஊழியர்களிடமும், கோட்டாட்சியர் கனிமொழி விசாரணை நடத்தினார்.
இதுபோல் இரு நாட்களுக்கு முன், குன்றத்துார் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘ரெய்டு’ நடத்தினர். பொது மக்களிடம் லஞ்சம் கேட்டு, சிரமப்படுத்தும் அதிகாரிகள் மீது, கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement