வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி, பாதுகாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. காப்புக் காடுகள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி உள்ளே நுழையும் நபர்கள் மது அருந்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற வனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது.

காடு

இந்த நிலையில், ஊட்டி எச்.பி.எஃப் அருகில் உள்ள காப்புக் காட்டில் சிலர் தடையை மீறி சுற்றுலா பயணிகளை குதிரைகளில் சவாரி அழைத்துச் செல்கின்றனர். வன விலங்குகள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் குதிரை சவாரி மேற்கொள்வதால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதோடு வன விலங்குகளுக்கும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நடைபெறும் குதிரை சவாரி குறித்து நம்மிடம் பேசிய கூடுகள் அறைக்கட்டளையின் நிறுவனர் ஊட்டி சிவதாஸ், ” ஊட்டி நகரின் அருகில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, கடமான் போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனத்திற்குள் குதிரை சவாரி மேற்கொள்வதால் குதிரைகளின் எச்சங்கள் மூலம் வனவிலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குதிரை சவாரி

இந்த அத்துமீறல் குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தடையை மீறி காட்டுக்குள் குதிரைகள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நபர்களை கடுமையாக எச்சரித்திருக்கிறோம். தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். அத்துமீறி குதிரை சவாரியில் ஈடுபடுபவர்கள் மீது வனச்சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.